மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் ஏற்பட்ட 10இற்கும் மேற்பட்ட மினி சூறாவளி காரணமாக 954 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மின்னல் தாக்குதல் சம்பவத்தில் 5பேர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மினி சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவியாக உலர் உணவு , தற்காலிக கொட்டகைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் சேதமடைந்த வீடுகள் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு மிக விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மினி சூறாவளிகள் காரணமாக வெல்லாவெளி -போரதீவுபற்று, ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
வெல்லவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பலாச்சோலை, பாலையடிவெட்டை, ஆனைகட்டியவெளி, போன்ற கிராமங்களில் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி வீசிய மினி சூறாவளி காரணமாக 73 வீடுகள் சேதமடைந்திருந்தன.
அதேபோன்று, செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி வீசிய மினி சூறாவளி காரமணமாக இராணைமடு, வேத்துச்சேனை கிராமங்களில் 260 வீடுகள் சேதமடைந்திருந்தன.
அத்துடன், 29ஆம் திகதி விவேகானந்தபுரம், சின்னவத்தை, புதுமுன்மாரிச்சோலை, 16ஆம் கொலனி ஆகிய பிரதேசங்களில் வீசிய மினி சூறாவளி காரணமாக 7 வீடுகள் சேதமடைந்ததிருந்தன.
கடந்த 9ஆம் திகதி மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், ஒரு குடும்பப்பெண் காயமடைந்திருந்தார்.