ஆபிரிக்காவை ஆட்டிப் படைக்கும் நோய்களில் யுத்தம், வறுமை என்பவை பிரதானமானவை. கென்யா, உகண்டா, சோமாலியா, எதியோப்பியா, நைஜீரியா, லிபியா இவை போன்ற ஆபிரிக்க நாடுகளில் இயற்கை வளங்கள் என எதுவுமில்லை என்றும் சொல்வதற்கில்லை. இன்றைய உலகுக்குத் தேவையாயுள்ள எண்ணெய் எரிவாயு என்பவை இந்நாடுகளிலுள்ளன. ஆனால் இந்த எண்ணெய், எரிவாயுக்களை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப முறைகள் இங்கு வளரவில்லை.
பன்னெடுங் காலமாக ஐரோப்பிய நாடுகளின் ஆட்சியின் கீழிருந்த ஆபிரிக்க நாடுகளின் நிர்வாகங்களிலோ அல்லது அறிவியல் துறைகளிலோ அந்நாட்டு மக்கள் உள்வாங்கப்படவில்லை என்பதால் இது சம்பந்தமான அறிவையும், தெளிவையும் அந்நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ளாதது துர்ப்பாக்கியமே. தப்பித்தவறி ஆபிரிக்க நாடுகள் தங்களது இயற்கை வளங்களை தாமாகவே பிரயோகிக்க முற்பட்டால் அதை வல்லரச நாடுகள் விடுவதுமில்லை. இதனால் ஆபிரிக்க நாடுகளின் நிலை வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதைப் போலுள்ளது.
நைஜீரியாவில் பாரிய எண்ணெய் வளமுள்ளது. லிபியாவில் எண்ணெய்க் குதங்களுள்ளன. மற்றும் எதியோப்பியா சோமாலியாவிலும் இயற்கை வளங்களுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எனினும் இங்குள்ள அரசியல் இராணுவ நிலைமைகள் இவ் வளங்களை பாவிக்கவோ பிரயோகிக்கவோ விட்டபாடில்லை. நைகரின் எண்ணெய் வளமுள்ள பிரதேசமொன்றில் பெரும் மோதல் இடம்பெறுகின்றன. இங்குள்ள எண்ணெய் கம்பனிகள் இஸ்லாமிய இயக்கங்களினால் குண்டு வைத்து தகர்க்கப்படுகின்றன. எண்ணெய் கெண்டெய்னர்கள் வீதியில் மறிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்படுகின்றன. எண்ணெய் வளங்களையும், கம்பனிகளையும் காவல் காக்கும் படையதிகாரிகள் கடத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு செய்வதற்கான காரணங்களை இஸ்லாமிய அமைப்புக்கள் நியாயப்படுத்துகின்றமையும் ஓர் விடயம். நைகரின் எண்ணெய் வளங்கள் உள்நாட்டில் பயன்படுத்தப்படவில்லை. பிரான்ஸின் அடங்காத பெற்றோலியப் பசியை பூர்த்தி செய்ய இந்த வளங்கள் எல்லாம் வகை தொகையாக பிரான்ஸ¤க்கு அனுப்பப்படுகின்றன. நைகர் ஆட்சியாளர்கள் பிரான்ஸின் பொம்மைகள் என்றெல்லாம் விமர்சிக்கும் போராட்ட அமைப்புக்கள் இதை எதிர்க்கவே போராடுகிறோம். உள்நாட்டு இயற்கை வளங்கள் உள்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்கின்றனர்.
ஒருவகையில் இதுவும் சரியானதே என்று எண்ணவும் இயலுமாயுள்ளது. ஏனெனில் நைகரின் தென் பிரதேசத்தில் பிரான்ஸ் படைகளேயுள்ளன. இவை இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நைகரில் அமைதி தேவையென்பதற்காக எங்கேயோவுள்ள பிரான்ஸ் படைகள் போராட வேண்டியதில்லை. இவ்வளவு பெரிய முதலாளித்துவ உலகில் பங்கில்லாமல், பயனில்லாமல் பாடுபடுவார்களா? நைகரின் இந்நிலை எத்தனை ஆண்டுகள் நீடிக்கப் போகின்றதோ தெரியாது. ஆனால் நீடிக்கும் வரைக்கும் உள்நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியுற்று பசி, வறுமை, பட்டினியேற்படுமென்பது மட்டும் தெரியும்.
அடுத்த ஆபிரிக்க நாடான சோமாலியா, எதியோப்பியாவின் நிலைமைகளோ இதைவிடக் கொடுமையானது. சுமார் இருபது வருடங்களாக சோமாலியாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் உள்நாட்டுப் போர் இலட்சக் கணக்கானோரைப் பலியெடுத்ததென்பது ஒருகதை. மரணித்தவன் போய்விட்டான் சோறும் தேவையில்லை, தண்ணியும் வேண்டியதில்லை, வீடும் அவசியமில்லை. ஆனால் யுத்தத்தால் இடம்பெயர்ந்து அகதிகளானோர் அங்கவீனமானோர் நிலைமைகளை எண்ணிப் பார்க்கவே இதயத்தில் பலமில்லை. இலட்சக் கணக்கானோருக்கு உணவு தேவை. உடை தேவை, வீடு அவசியம். மருத்துவம் அவசியம் இந்தப் பெரிய சவாலை சோமாலியா எவ்வாறு சமாளிக்கும். தொழில் இல்லாதோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால் பட்டினிச்சாவின் பட்டியலும் நீண்டபடியேயுள்ளது.
ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு வளர்முக நாடுகளும் வளர்ந்த நாடுகளும் வாரி வழங்கியும் நிலைமை தீர்ந்த பாடில்லையே. சோமாலியாவை இவ்வாறு யாரும் கவனித்தார்களா? அல்லது கணக்கிலெடுத்தார்களா? அண்மைய, ஆய்வொன்றின்படி 29 ஆயிரம் சிறுவர்கள் சோமாலியாவில் மாத்திரம் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நீண்டகாலப் போர், கடுமையான வரட்சி, தொடர் பட்டினி என்பன சோமாலிய மக்களை அதிலும் சிறுவர்களை வாழவிட்டதில்லை. ஒன்றுக்கும் இல்லாமலாகி கடைசியில் அக்குழந்தைகளை மண்ணறையிலே மடியவைத்துள்ளது.
உகண்டா, ருவண்டா, எதியோப்பியா, கென்யா போன்ற நாடுகளையும் விழிப்பாக இருக்குமாறு உலக உதவி வழங்கும் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. ஆபிரிக்க நாடுகளிலுள்ள இயற்கையான காலநிலைக்கு இழுபறியாகி யுத்தங்கள் எட்டாப்பொருத்தம். போர்கள் அனைத்தும் ஓய வேண்டும். உலக நாடுகளின் உதவிக்கரங்கள் ஆபிரிக்காவை நோக்கி நீள வேண்டும். நகர வேண்டுமென்பதே ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புகளது அவசர வேண்டுகோளாயுள்ளது. இன்னும் 12 மில்லியன் மக்கள் எதியோப்பியா, சோமாலியா, கென்யா, டுபுட்டி ஆகிய நாடுகளில் உணவின்றி தவிப்பதாக வெளியாகியுள்ள அறிக்கையில் உரிய நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் எச்சரித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளில் பெருமளவான சிறுவர்கள் போஷாக்கின்றியே மரணிக்கின்றனர். கடுமையான வரட்சி யுத்தத்தால் இடம்பெயரல் இராணுவக் கெடுபிடிகள் என்பவற்றால் அமைதியான நிலையான வாழ்வை மக்கள் இழக்கின்றனர். குறிப்பாக பெண்கள் தைரியமிழப்பதால் குழந்தைகளுக்கு முறையாகப் பாலூட்ட முடியாதுள்ளனர். உணவூட்ட இயலாதுள்ளனர். கல்வியைப் புகட்ட தெரியாது தவிக்கின்றனர். இவ்வாறான நிலைமைகளே ஆபிரிக்காவில் பஞ்சம், பட்டினி போஷாக்கின்மை ஏற்பட பிரதான காரணம் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நல்ல கேள்விதான். ஆனாலும் யார் யாரிடம் இதைக் கேட்பது. எப்படியாவது பொருளைக் கொண்டுவந்து சேர்த்தாலும் பங்கிடப் போவது யார் என்பது இரண்டாம் பிரச்சினையாகிவிடுமே. ஐயோ போகிற போக்கில் சோமாலியாவிலுள்ள ஆபிரிக்க யூனியன் படையும் அதை எதிர்த்துப் போரிடும். அல் ஷெபாப் அமைப்பும் பொருட்களை பங்கிட்டுக் கொள்ளுமோ, உண்டால்தானே போராளிக்கு உடல் பலம் தேறும். ஒருவாய் சோற்றுக்கு ஆயுதபலம் தேவை சோமாலியாவில்.
ஆபிரிக்க குழந்தைகளை பட்டினிச் சாவிலிருந்து பாதுகாக்க எண்ணியுள்ள பிரிட்டன் விமானங்களுடாக பொருட்களை அனுப்ப விரும்பியுள்ளதாம். 15 முதல் 50 மெற்றிக் தொன் வரையிலான உணவுப் பொருட்கள் விமானம் மூலம் ஆபிரிக்கா வரவுள்ளன. இதையாவது முறையாகக் கொண்டுவந்து சேர்க்க போராளிகளதும் இராணுவத்தினதும் குண்டுகளும் துப்பாக்கிகளும் தற்காலிகமாவது அமைதியாகுமா ஆபிரிக்காவின் பட்டினிக் கொடுமை அமெரிக்காவின் கண்களையும் திறந்துவிட்டது. பொருட்களின் விலை வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக மேலதிகமாக விளைந்த கோதுமை மாவை கடலில் கொட்டிய எஜமான் அல்லவா அமெரிக்கா. என்ன செய்ய தோலுடன் எலும்புகள் ஒட்டிப்போயுள்ள ஆபிரிக்க குழந்தைகளைப் பார்க்க அமெரிக்காவுக்கும் சகிக்கவில்லையாம் 459 மில்லியன் டொலரை உதவியாக வழங்க அமெரிக்கா இணங்கியுள்ளது. ஆபிரிக்காவுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையில் இதுவே மிகக் கூடுதலானது என்பதும் உண்மை இதைக் கண்டு பல சர்வதேச அமைப்புகளும் அமெரிக்காவுடன் இணை ந்து ஆபிரிக்க குழந்தைகளை பட்டினிச் சாவிலிருந்து காப்பாற்ற முன்வந்துள்ளன.
1984 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆபிரிக்காவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பஞ்சமாம் இது. எனவே அனைவரும் வாருங்கள் மனித உயிர்களைக் காப்பாற்ற என்ற அறைகூவல் சர்வதேசம் எங்கும் கேட்டவண்ணமுள்ளன. அது மாத்திரமன்றி இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மனித பரம்பரைக்கே கடும் சவாலாக உள்ளதென உலக உணவு ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவின் நிலைமை இந்தளவு மோசமடைய அண்மையில் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி இயற்கையழிவு, காலநிலை மாற்றம் என்பனவும் போதியளவு பங்களிப்புச் செலுத்தியுள்ளதாம்.
எனவே இனியாவது வீண் செலவுகளைக் குறைத்து களியாட்டங்களை கட்டுப்படுத்தி கறுப்புப் பணத்தை ஒழித்து ஆபிரிக்க கண்டத்து மக்களை சோறுதின்னும் மக்களாகவும் குழந்தைகளை பால்குடிக்கும் செல்வங்களாகவும் மாற்ற முன்வருவோம். இன்றுவரை ஆபிரிக்க மக்கள் நாள் ஒன்றுக்கு ஒரு தடவையாவது உணவுண்பார்களா என்பது சந்தேகமே என்கின்றனர் சிலர்.