11 October 2013

"குடிகார மாணவர்களை வெளியேற்று" - ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் கோசம்

SHARE
பாடசாலை மாணவர்களுக்கென சில கட்டுப்பாடுகள் காணப்படுகின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சில மாணவர்கள் தமது சிறுபராயத்திலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகின்றது.

பாடசாலைக்கு வெளியேயான சூழலில் மாணவர்கள் போதைவஸ்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் பாடசாலை இல்ல விளையாட்டு நிகழ்வுகள், வாணிவிழா நிகழ்வுகள், ஆசிரியர் தன நிகழ்வுகள் மற்றும் பாடசாலை தின நிகழ்வுகள் ஆகியவற்றின் போது பாடசாலை நிருவாகத்தினருக்கு தெரியாத வகையில் இத்தகைய போதைவஸ்து பாவனையில் ஈடுபடுகின்றனர். 

இத்தகைய நடவடிக்கைகளினால் மாணவர் - ஆசிரியர்களுக்கிடையே முறுகல், சகமாணவர் - மாணவர்களுக்கிடையேயான முறுகல்கள் என்பபன தோற்றம் பெற்றுவருககின்றன.

கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் போது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம் மாணவர்களை தண்டித்த போது, ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதனால், மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்றையதினம் வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந் நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்கு உதவ வேண்டும் எனவும், பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ஒழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் மாணவர்கள் பாடசாலை வளாகத்தினுள் பிரதான கேற்றை மூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலைக்கு வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமாராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.



SHARE

Author: verified_user