சித்தாண்டியில் அமைந்துள்ள மட்/ககு/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இவ்வாண்டு சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா 2013-11-25 திங்கட்கிழமை சித்தாண்டி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.
சித்தாண்டி-மாவடிவேம்பு பொது அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வை அதிபர் திரு.தி.ரவி அவர்கள் தலைமைதாங்கி நடாத்தினார். நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப் பணிப்பாளரின் பிரதிநிதியாக வருகைதந்த பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி.சு.குலேந்திரகுமார் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு அவர்களும், கல்குடா வலய ஆசிரிய நிலைய முகாமையாளரும் பாடசாலையின் முன்னாள் அதிபருமான திரு.வ.பஞ்சலிங்கம் அவர்களும் கலந்துசிறப்பித்தனர்.
நான்கு தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டிருந்த இப்பாராட்டு நிகழ்வில் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா வலயத்தில் முதலிடம் பெற்ற செல்வி.க.சுபதாரிணி (186 புள்ளிகள்) உட்பட வெட்டுப்புள்ளிகளைத் தாண்டிய மாணவர்கள், மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் என 72பேருக்கு வெற்றிப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு பாராட்டுரை நிகழத்தப்பட்டது. இத்தகைய விசேட சாதனைகளுக்கு வழிவகுத்த 18 ஆசிரியப் பெருந்தகைகளும் இதன்போது வெற்றிச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.