மட்டக்களப்பு மாவட்டத்தில் மாமரச் சோலைகளும், வேம்பு மரச்சோலைகளும் நிறைந்த மாவடிவேம்பு எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்திற்கு எல்லைகளாக வடக்கே சித்தாண்டி, கழுவன்கேணி எனும் கிராமத்தையும், கிழக்கே வந்தாறுமூலை எனும் கிராமத்தையும், மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளாக மருத நிலத்தையும் கொண்டு அமைந்துள்ளது. இக்கிராம மக்களின் பிரதான தொழிலாக விவசாயமும், பிரம்புத் தொழிலும், கூலி வேலை முதலியன காணப்படுகின்றன.
பாடசாலையானது ஆரம்பத்தில் 1958 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் முதலாம் திகதி கிராம மக்களின் ஒத்துழைப்புடனும், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களின் முயற்சியினாலும் தடி, கிடுகு மற்றும் களிமண் என்பவற்றைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறிய ஓலைக் குடிசையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் அக்காலப்பகுதியில் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தவரால் மாவடிவேம்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் பதிவு செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் 18 மாணவர்களுடன் ஆரம்பமான இப்பாடசாலையின் ஸ்தாபராகவும், தலமை ஆசிரியராகவும் அளப்பரிய கல்விப் பணியாற்றியவர் சு.வடிவேல் என்பவர் ஆவார். இவருடைய கல்விப் பணி சிறப்பிற்கும், மதிப்பிற்கும் உரியது என்பது மறக்கக்கூடியது அல்ல. முதலாவது வகுப்புடன் முளைவிட்ட இந்தப் பாடசாலையானது வருடம் ஒரு வகுப்பாக துளிர் விட்டு வந்தது. ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு வரையான ஆரம்பப் பாடசாலையாக விளங்கியது.
1988 ஆம் ஆண்டில் இந்தப் பாடசாலையானது மாவடிவேம்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் எனப் பெயர் பெயர்பெற்றது. கற்று அறிந்து ஒழுகு என்னும் மகுட வாசகத்தோடு அமைந்த பாடசாலை இலச்சினையையும் கொண்டுள்ளது. இலச்சினையில் உள்ள கதிரவன் அஞ்ஞானமாகிய இருளை அகற்றி மெஞ்ஞானமாகிய ஒளியைக் கொடுப்பதாகவும், வெண்தாமரை கள்ளங்கபடமற்ற தூய்மையான உள்ளத்தை வெளிப்படுத்துவதாகவும், புத்தகமானது கல்வியை வெளிப்படுத்துவதாகவும், தானியக் கதிரானது கிராம மக்களின் தொழிலையும், கீழுள்ள அலங்காரமானது கடமை, கன்னியம், கட்டுப்பாடு என்பவற்றை வெளிப்படுத்துவதோடு அதிலுள்ள இருவட்டங்களும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிவுள்ளவர்கள் என்பதையும் வெளிப்படுத்தவதாகவும் பாடசாலையின் இலச்சினை அமைந்துள்ளது. பாடசாலையின் பாடசாலைக் கீதம், பாடசாலைக் கொடி என்பன எமது பாடசாலையின் கௌரவத்தையும், மதிப்பையும் அடையாளப்படுத்தி நிற்கின்றது.
பாடசாலையில் 350 இற்கு மேற்பட்ட மாணவர்களையும், 20 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. பாடசாலையில் வருடந்தோறும் இல்லவிளையாட்டுப் போட்டி நடைபெறுகின்றது. இதன்போது மாணவர்கள் கங்கை, ஜமுனை, காவேரி என மூன்று இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு நிகழ்வுகள் நடைபெறும். அத்டதுடன் தமிழ் மொழி தினம், முத்தமிழ் மன்றம், ஆங்கில தினவிழா, வாணிவிழா, போன்ற விழாக்களை நடாத்தி வருவதோடு கோட்ட மட்டத்திலான போட்டிகளிலும் பங்குகொண்டு வெற்றிகளையும் பெற்று வளர்ச்சி அடைந்து வருகின்றது.
பாடசாலையின் கட்டம் முதலிய பௌதிக வளங்கள் போதுமானதாகக் காணப்படவில்லை என்பது மிகவும் முக்கிய குறைபாடாகும். இருந்தபோதிலும் கல்வி மட்டத்தில் தொடர்ந்தும் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலைக்கு சேவையாற்றி அதிபர்கள் விபரம்
• திரு. சு.வடிவேல்
• திரு. க.செல்லத்தம்பி பண்டிதர்
• திரு. பி.முத்துப்பிள்ளை
• திரு. ஆ.செல்லையா பண்டிதர்
• திரு. என்.இராசதுரை
• திரு. என். ஆறுமுகம்
• திரு. மு.பொன்னுச்சாமி
• திரு. மு.தட்சணாமூர்த்தி
• திரு. வி.ஜெயபாலன்
• திரு. வே.ஈஸ்வரமூர்த்தி
• திரு. எஸ்.கிருஸ்ணராஜா
• திரு. பொ.சிவகுரு
• திரு. தி.யோகநாதன்
ஆக்கம் : புன்னியமூர்த்தி சிவகரன், தரம் -09, மாவடிவேம்பு-02