சித்தாண்டி பிரதேசத்தில் இன்றைய தினம் சில பிரதேசங்களில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் திடீரென குறைவடைந்திருந்தமையினால் சிலர் பரபரப்படைந்திருந்தனர். சித்தாண்டி, மாவடிவேம்பு, வினாயகர் கிராமம் போன்ற பகுதிகளில் பொதுவாக நேற்றைய தினம் இருந்த கிணற்று நீர்மட்டமானது இன்று காலையில் திடீரென சுமார் 1 அடி வரையிலும் அல்லது அல்லது அரை அடி வரையிலும் குறைந்திருந்தமையினாலேயே இந்தப் பரபரப்பு ஏற்பட்டது.
சுனாமி வருமுன்னர் இவ்வாறு கிணற்று நீர்மட்டம் குறைவடையும் என்ற தோற்றப்பாட்டிலேயே மக்கள் இவ்வாறு பீதியடைந்தனர்.
கிணற்று நீர்மட்டம் கரையோரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் குறைவடைவதற்கு பல்வேறு காரணிகள் காணப்படலாம்.
1. அதிகளவிலான ஆவியாக்கம்
2. கடல்நீர்மட்டம் தாழ்த்தப்படுதல் (வற்றுப்பெருக்கு, சுனாமி, அதிக ஆவியாக்கம்)
3. புவிநடுக்கங்களினால் ஏற்படும் தகட்டசைவு
4. அண்மையில் உள்ள நீர்த்தேக்கத்தின் மட்டம் குறைவடைதல்
போன்ற காரணிகளைக் குறிப்பிடமுடியும். ஆனால் குறித்த காலப்பகுதியில் இலங்கைக்கு அண்மையாகவுள்ள எந்தவொரு பிரதேசத்திலும் சுனாமி அல்லது புவிநடுக்க நிலைமைகளும் ஏற்படவில்லை என்பதுடன், இது குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதுமில்லை.