வடிந்துசெல்லும் வெள்ளநீரும், கோராவளி அம்மன் உற்சவ ஆரம்பமும்


வடிந்த செல்லும் வெள்ள நீரின் மத்தியிலும் கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்தின் சடங்கு உற்சவ நிகழ்வுகள் இன்று (20.01.2016) சிறப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு நகரின் வடக்கிலே மலையும், காடும், வயலும் ஆறும் சூழ்ந்த குடும்பிமலை பிரதேசத்தில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவினுள்  கோராவளி கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பப்ற சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சியினால் பல ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்திருந்தது. அந்தவகையில் கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்தைச் சுற்றி ஓடுகின்ற மாதுறுஓயாவின் கிளைநதியான மாந்திரி ஆறும் பெருக்கெடுத்திருந்தது. அதுமட்டுமன்றி கிரான் பாலத்தின் மேலாகவும் அதிகரித்த நீரோட்டம் காணப்பட்டது. இவற்றின் காரணமாக குடும்பிமலைப் பிரதேசத்திற்கான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்ததுடன், கோராவளி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்குரிய சாதகமற்ற நிலையும் காணப்பட்டது. இதனால் குறிப்பிட்ட குறிப்பிட்ட ஊர்களின் ஆலயங்களிலேயே நிகழ்வுகள் இடம்பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பக்தர்களின் தீவிர முயற்சியியினால் இத்தடவையும் வழமைபோன்று சடங்கு உற்சவ நிகழ்வுகள் இடம்பெறத் தொடங்கியுள்ளன. இதேவேளை வெள்ள நிலைமைகள் மற்றும் ஆபத்துக்களை தவிர்க்குமுகமாக  கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தினால்  அறிவித்தல் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  
(படங்கள்:- சீலன், மதுசன், டினேஸ்)













































Previous Post Next Post