மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளைத் தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக விளங்குவது ஆசிரியர்களின் கற்பித்தல் முறையாகும். ஆசிரியரானவர் மாணவர்களின் சுபாவம், தேவை, முயற்சி என்பவற்றுக்கேற்ப தனது கற்பித்தல் முறைகளை வடிமைத்துக் கொள்ள வேண்டும். வினைத் திறனான கற்பித்தல் முறையினூடாக சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
தனது செயலை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக கற்பித்தலின் போது பல்வேறு முறைகளை ஆசிரியர்கள் பின்பற்றி வருகின்றனர்.
கற்றல், கற்பித்தல் செயன்முறையின் போது பிரதானமாகவும் நேரடியானதுமான பங்காளியாக ஆசிரியர்கள், மாணவர்கள் காணப்படுகின்றனர். இவ்விரு தரப்பினருக்கும் வெவ்வேறு வகிபாகங்கள் உள்ளன. ஆசிரியர் கற்றலுக்கு வழிகாட்டுபவராகவும் உதவி புரிபவராகவும் வசதி செய்து கொடுப்பவராகவும் இருக்கின்றார். வெற்றிகரமான கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர் பல்வேறு கற்பித்தல் முறைகளைக் கையாளுகின்றார். ஆசிரியர் பயன்படுத்தும் கற்பித்தல் முறைகள் வருமாறு
01) விரிவுரை முறை
(Lecture Method)
இது சம்பிரதாயபூர்வமான கற்பித்தல் முறையாகும். இம் முறையானது ஆசிரியர் மையத்தன்மை கொண்டதாகக் காணப்படுகிறது. ஆசிரியர் இம்முறையில் கற்பிப்பதால் மாணவர் செயற்படுவது குறைவாக இருக்கும். உயர் வகுப்புகள் செயலமர்வுகள் போன்றவற்றுக்கு இக்கற்பித்தல் முறை பொருத்தமானதாக இருக்கும். குறுகிய விரிவுரைகளை நிகழ்த்தி அதன் பின்னர் முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும். மேலும் பல்வேறு வரைபடங்கள், வீடியோப் படங்கள் காட்சிப்படுத்தல் போன்ற முறைகளினூடாக விரிவுரை அமையும் போது, விரிவுரை முறை வினைத்திறனுடையதாகவிருக்கும். விரிவுரை முறையினூடாக பொறுமை, சகிப்புத்தன்மை, அமைதி, ஒத்துழைப்பு, கிரகித்தல், மதிப்பளித்தல், செவிமடுத்தல், பணிவுடன் கலந்துரையாடல் போன்ற விழிமியப் பண்புகள் பிள்ளையிடம் வளர்க்கப்படுகின்றன.
02) குழு முறை (Group activity)
இன்று பாடசாலைகளில் பரந்தளவில் பயன்படுத்தும் கற்பித்தல் முறை இதுவாகும். சிறுபிள்ளைகள் சமவயதுக் குழுவினருடன் செயற்படுவதற்கு விரும்புவர். இதனால் பிள்ளைகள் ஆரம்ப வகுப்புகளில் குழுமுறையில் வகுப்புகளில் அமர்கின்றனர். 5E கற்பித்தல் முறையின் போது குழுமுறை பயன்படுத்தப்படுகிறது.
வகுப்பில் அனைத்து மாணவர்களையும் சிறு குழுக்களாகப் பிரித்து, கருத்துக்களை சேகரிப்பதற்கு குழுக்களாக பிள்ளைகளை ஈடுபடுத்தல் இதன் அடிப்படை நுட்பமாகும். இக்குழுமுறையில் தேடியறிதல், ஒப்படை, விளையாட்டு என்பவற்றில் பிள்ளைகள் குழுக்களாக ஈடுபட்டு கற்பர். இதன் போது இக்குழுமுறை கற்பித்தலை மேற்கொள்ளலாம். இக்கற்பித்தல் முறையானது சிறந்த கற்பித்தல் முறையாக பயன்படுத்தப்படுகிறது.
03) வினாவுதல் முறை (Questioning Method) (வினா விடை முறை)
பாடப் பிரவேசத்தின் போது கற்பித்த விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் மதிப்பீடு செய்து கொள்வதற்கும் இம்முறையை ஆசிரியர்கள் பயன்படுத்துவர். அத்துடன் இந்நுட்ப முறையை ஏனய கற்பித்தல் முறைகளுடன் தொடர்புபடுத்தி சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். இம்முறையில் கற்பிக்கும் போது ஆசிரியரின் வினாக்கள் எளிமையாக இருத்தல் வேண்டும். ஆம், இல்லை என்ற விடைகளைக் கொண்ட வினாக்களை தவிர்த்தல் வேண்டும்.
வினவிய வினாவின் பின்பு ஆசிரியர் பிள்ளைகளுக்கு சிந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதன் பின்பு மாணவர் விடையளிப்பதற்கு ஆசிரியர் வழிப்படுத்தல் வேண்டும். குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் வினாக்களைக் கேட்கக் கூடாது. எல்லா மாணவர்களையும் இதில் பங்குபற்றச் செய்ய வேண்டும்.
04) ஒப்படை வழங்கல் முறை (Assignment methods)
தனியாகவோ அல்லது குழுவாகவோ ஒப்படைகளை மேற்கொள்ள முடியும். இடைநிலைக் கல்வியில் மாத்திரமன்றி ஆரம்பக் கல்வியிலும் ஒப்படை முறையைப் பயன்படுத்த முடியும். இது முழுமையாக மாணவரை மையமாகக் கொண்ட ஒரு கற்பித்தல் முறையாகும். சமகாலப் பிரச்சினை ஒன்றை அடிப்படையாகக் கொள்ளுதல், அல்லது பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொள்ளுதல், செயற்திட்டமாக நடை முறைப்படுத்தக்க விடயம் ஒன்றை நடைமுறைப்படுத்தல், விஞ்ஞானப் பாடம் தொடர்பாக அனுபவம் பெறல் போன்ற விடயங்கள் ஒப்படையாக மேற்கொள்ளப்பட முடியும்.
05) கண்டறிதல் முறை (Discovery methods)
இது இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு பொருத்தமான கற்றல் கற்பித்தல் முறையாகும். யாதாயினும் ஒரு பிரச்சினையை அல்லது சம்பவத்தை தேர்ந்தெடுத்து அது தொடர்பில் அனைத்து தகவல்களையும் சேகரித்து அவற்றை பகுப்பாய்வுக்குட்படுத்தி அதனூடாக தேவையான பதிலை, அல்லது அறிவை ஒன்று திரட்டிக் கொள்ளல் இங்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சம்பவத்திற்கு, அல்லது விளைவிற்கு காரணமான அடிப்படைக் காரணிகளை சேகரித்தல், தேடியறிதல் என்பவற்றின் மூலம் கண்டறிதல் கற்பித்தல் முறையைச் செய்ய முடியும். இக்கற்பித்தல் முறையை தனியாகவோ அல்லது குழுவாகவோ செயற்படுத்தலாம்.
06) விளையாட்டு முறை (Playing methods)
இக்கற்பித்தல் முறையில் மாணவர் உற்சாகத்துடன் ஈடுபடுவர் கணிதம், மொழி, சங்கீதம் போன்ற பாடங்களை விளையாட்டு முறை மூலம் கற்பிக்க முடியும். ஆரம்பப் பிரிவு மாணவர்கள் விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவர். சிறு பினள்ளைகளுக்கான வெற்றிகரமான ஒரு கற்பித்தல் முறையாகக் இதனைக் கருத முடியும்.
வகுப்பறைக்கு வெளியில் அல்லது விளையாட்டு முற்றத்திதில் இக்கற்பித்தலை மேற்கொள்ளும் போது பிள்ளைகளுக்கு செயற்பாட்டு ரீதியான அனுபவம் கிடைப்பதோடு வகுப்பறையும் பாடசாலையும் பிள்ளைகளுக்கு பிடித்தமான இடமாக மாறும்.
07) சிந்தனைக் கிளறல்-முறை (Brainstorming Method)
சிந்தைனக் கிளறல் என்பது ஏதேனும் ஒரு பிரச்சினை அல்லது முரண்பாடு தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மாணவருக்கு சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் சிந்தனையைத் தூண்டி விடுவதாகும். முதலில் மாணவர் முன்வைக்கும் சகல கருத்துக்களை நிராகரிக்காமலும், திருத்தியமைக்காமலும், விமர்சிக்காமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு மாணவர் கூறும் கருத்துக்களை ஆசிரியர் அப்படியே குறித்து வைத்தல் வேண்டும்.
08) வெளிக்களக் கற்கை முறை (Field study)
வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை ஆசிரியர் அழைத்துச் சென்று கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை இக்கற்பித்தல் முறை குறிக்கும். இடைநிலை மாணவருக்கே இது மிகவும் பொருத்தமானதாகும். ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் வயதுக் குழுவினருக்கேற்ப பொருத்தமான வேலைத் திட்டங்களை தீர்மானித்து இவற்றை நடைமுறைப் படுத்தலாம். வெளிக்களக் கற்கையானது கல்விச் சுற்றுலா,களச்செயற்பாடு, களஆய்வு என பல வகையாக அமைகிறது.
09) நுண்முறைக் கற்பித்தல் (Micro teaching)
வகுப்பறையில் கற்பிக்கும் போது விளங்காத மாணவரை, இடர்படுபவர்களை தனியாக அழைத்து உரிய பாடவிடயத்தை ஆசிரியர் தெளிவுபடுத்தி விளங்கிக் கொள்வதற்கு நுட்ப முறைகளை கற்பித்தலை பயன்படுத்த முடியும்.
இடர்படும் மாணவரை கரும்பலகைக்கு அருகில் அழைத்து ஐந்து, பத்து நிமிடங்கள் தனிமைப்படுத்திக் கற்பிக்க வேண்டும்.
முன்வைத்தல் : (Presentation)
இது வோர் கற்றல் கற்பித்தல் என்பதை விட தனியாளின் ஆற்றலை அல்லது தகைமையை வெளிப்படுத்தும் ஒரு அணுகுமுறையாக கருதப்படுகிறது. இது வயது வந்தோருக்கான கல்வியில் இதனை ஓர் கற்றல் முறையாகவும் பயன்படுத்த முடியும்.
போலச் செய்தல் (imitate):
இக்கற்றல், கற்பித்தல் முறையில் மாணவர் நேரடியான கற்றல் அனுபவத்தை பெற்றுக் கொள்வர். ஒரு செயற்பாடு நிகழ்வதை அவ்வாறே முன்வைத்தல் போலச் செய்தலாகும். அதற்கிணங்க பெறப்படும் அனுபவம் முழுமையான கற்றலாகும்.
இம்முறையைப் பிரயோகித்து முன்வைக்க எதிர்பார்க்கும் அறிவுத் தொகுதியானது மிகவும் வினைத்திறனுள்ளதாக அமையும். சிறுபிள்ளை யொன்று கார் ஒன்றைச் செலுத்தும் விதத்தை ஒலியெழுப்பி செயற்பாட்டினூடாகச் செய்யும். இதுவே போலச் செய்தலாகும்எனவே இவ்வாறான கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்தும் போது சிறந்த பரீட்சை அடைவு மட்டத்தை பெறலாம்.
இஸ்மாயில் ஹுஸைன்தீன் (B Ed).
(நன்றி: http://www.thinakaran.lk)