இந்தியாவின் மேகமலைப் பகுதி

மேகமலை பெரிய மரங்கள், பசுமையான நிலபரப்புடன், மிக அழகான சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலைமற்றும் காபி பயிர் தோட்டம், உயர்ந்த மலைகளின் அழகு, மிக ஆழமான பள்ளம், அழகிய ஏரிப்பகுதி என பல இயற்கை அழகுக் கொட்டிக் கிடக்கும் இடம்தான் மேகமலைப் பகுதியாகும்.
மேகமலை நாலைந்து மலைச்சிகரங்கள் நடுவே உள்ள ஒரு பள்ளத்தாக்கு. மேகமலை தமிழ்நாட்டில் உள்ள மலைவாச தலங்களில் சிறந்த அமைப்பு கொண்டது. சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்து கொண்டிருக்கிறது குரங்குகள் கூட்டம்.சாலை இருபது அடியாக இருப்பதால், எதிரே வரும் வாகனத்துக்கு வழிவிட்டால் மட்டுமே மலை ஏற முடியும். முழுவதும் பனிமூட்டம். சூரிய வெளிச்சம் உள்ளே வராது. அதனால் மலையில் லேசான இருட்டு. ஆங்காங்கே சாலையில் ஒன்றிரண்டு பேர் நடந்து செல்கிறார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் குறைவுதான்.
மேகமலையில் டீ, காபி தோட்டங்கள் நிறைய. அங்கே வேலை செய்யும் தொழிலாளர்கள் யாரும் பஸ்சை நம்பி இருப்பதில்லை. மாறாக ஆண்களும், பெண்களும் குறுக்கு வழியில் மலையில் ஏறுகிறார்கள். எட்டு மணி நேர வேலைக்காக பதினாறு மணி நேரம் அவர்கள் மேலும் கீழுமாய் நடப்பது ஆச்சரியம்!அதிகாலையில் மலை ஏறுபவர்கள் வேலை முடிந்து மாலை நான்கு மணிக்கு கீழே இறங்குகிறார்கள். வீடு வந்து சேரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிடுமாம்.
வீடுகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். பகல் நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ். அதனால் எப்போதும் இதமான குளிர். சீசன் நேரம் என்றால் பகல் நேரத்தில் கூட “ஸ்வெட்டர்’ தேவைப்படும். குளிர் தாங்கிக் கொள்ளலாம்.
“மேகமலையில் அவசரத்துக்கு டீ குடிக்க வேண்டும் என்றால் கூட வழியில்லை. ஒன்றிரண்டு “ரிசார்ட்டுகள்’ மட்டுமே உண்டு. மதிய உணவு அங்கே எடுத்துக்கொள்ளலாம். ஆனால் விலை சற்று அதிகம். குடும்பத்தோடு செல்பவர்கள் கையோடு உணவு கொண்டு செல்வது நல்லது!’
வழியெங்கும் ஆங்காங்கே குறுக்கிடும் அருவிகள். எல்லாப் பருவநிலைகளிலும் அருவிகளில் தண்ணீர் கொட்டுவது உண்டாம். தண்ணீர் அத்தனை குளிர்ச்சி. இரண்டு மலைகளுக்கு இடையே பிரமாண்டமாய் கட்டப்பட்டிருக்கிறது மலையாறு அணை. அணைத் தண்ணீரில் முகம் பார்க்கலாம். அத்தனை சுத்தம். அங்கே திடீரென யானைக் கூட்டங்களின் அணிவகுப்பு. அவை தண்ணீர் அருந்துவதை தூர இருந்து வேடிக்கை பார்க்கலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் வருகிறது கம்பன் பள்ளத்தாக்கு. இடையிடையே மலைகளிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சியில் ஒரு சில பயணிகள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.காட்டு மாடு, மிகப் பெரிய அணில், வேணாம்பல் (ஹார்ன்பில்)… என விலங்குகளின் நடமாட்டம் அமோகம். (நன்றி:- இன்று ஒரு தகவல்)
Previous Post Next Post