சித்தாண்டியின் பலபகுதிகளில் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகள் மற்றும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். சித்தாண்டி 03, 04 ஆகிய குறிச்சிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து தங்கியுள்ளனர்.
சித்தாண்டி இராமகிருஸ்னா வித்தியாலயம், சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம், சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயம், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலும், சித்தாண்டி பொதுச்சந்தை மற்றும் உயாபகுதிகளில் உள்ள உறவினர் வீடுகளிலும் பொதுமக்கள் தங்கியுள்ளனர்.
வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் தற்போது க.பொ.த.சா.தரப் பரீட்சை இடம்பெற்று வருவதனால் ஒரு குறிப்பிட்ட அளவினரான மக்களே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதிக்கொண்டிரக்கின்ற பல மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், ஒரு சில மாணவர்கள் இன்றைய தினம் இடம்பெற்ற பரீட்சையில் சமூகமளிக்கவும் தவறியிருந்தனர்.
சித்தாண்டி அலைமகள் வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களுடன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொ.வரதராஜ், சிவில்குழு உறுப்பினர் சி.திருப்பதி, சேவகம் கணனி வள நிலைய போதனாசிரியர் ந.நித்தியானந்தம் மற்றும் பிரதேச சிவில் குழு பொலிஸ் அதிகாரி முதலியோரும் தங்கிருந்து பராமரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.