'ஆரியர் போற்றும் அணிசால் இலங்கையிலே
சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும்
ஏரால் இயன்ற செந்நெல் இன்சுவைதீங் கன்னலொடு
தெங்கி ளநீருத் தீம்பலவி னள்ளமிர்தும்
எங்குங் குறையா இயலுடைய நன்னாடு
மட்டக் களப்பெனும் மாநாடு........'
சீரார் குணதிசையைச் சேர்ந்து வளர்புகழும்
ஏரால் இயன்ற செந்நெல் இன்சுவைதீங் கன்னலொடு
தெங்கி ளநீருத் தீம்பலவி னள்ளமிர்தும்
எங்குங் குறையா இயலுடைய நன்னாடு
மட்டக் களப்பெனும் மாநாடு........'
என்று யாழ்நூலில் புகழ்ந்து கூறப்படும் பாடலினூடாக நாம் மட்டக்களப்பின் பெருமைகள் பற்றி அறியமுடியும். இலங்கையின் கிழக்கு கடற்கரை சார்ந்து கிழக்கு மாகாணத்தில் அமைந்து காணப்படுகின்றது. பொலநறுவை, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை எல்லையாக கொண்டுள்ளது. மட்டக்களப்பு என்பது காரணப் பெயராகக் காணப்படுகின்றது. அதாவது இங்கு காணப்படும் வாவி நிலமட்டத்துடன் மட்டுக்கு மட்டாக காணப்படுவதினால் மட்டக்களப்பு என்று கூறப்படுகின்றது. மட்டக்களப்பைக் குறிக்கும் 'டீயவவiஉயடழய' என்பது போர்த்துக்கீச சொல்லிலிருந்து உருவாகியமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பின் வரலாறு பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மிகத்தொன்மையான வரலாற்றினைக் கொண்ட மண்மணம் கமழும் பிரதேசமாகும். உதாரணமாக அண்மைக்காலங்களில் வாகரை, தொப்பிக்கல் பிரதேசம் போன்ற பல இடங்களில் பல வரலாற்றாதாரங்கள் கிடைத்துள்ளன. அதுமட்டுமன்றி இதிகாச காலங்களிலும் மட்டக்களப்பு பிரபல்யம் வாய்ந்த இடமாகக் காணப்படுகின்றது. இராமாயணத்தில் இராமன் வந்து இலிங்கம் வைத்து வழிபட்ட இடமாக காணப்படுகின்றது.
மேலும் மட்டக்களப்பு 'மீன்பாடும் தேன்நாடு' என வர்ணிக்கப்படுகின்றது. இதற்கு காரணம் இரவு நேர முழு பௌர்ணமி தினமன்று மட்டக்களப்பு வாவியிலே ஓர் இன்னிசை கேட்பதாக கூறப்படுகின்றது. இது ஏரிகளினுள் நீர் புகுவதினால் எழும் ஓசை எனவும் கூறப்படுகின்றது. எனினும் இதனை மீன்கள்தான் இசையெழுப்புகின்றன என்ற கருத்து மக்களிடையே காணப்படுகின்றது. இதன் காரணமாக 'மீன்பாடும் தேன்நாடு' சிறப்பாக வர்ணிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மானிடவியல், சமூகவியல் நோக்கில் தன்னகத்தே சிறப்பான பண்பாடுகளை கொண்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது. இதனை அடியொற்றியதாக பல ஆய்வுகளை செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. உதாரணமாக சாதாரண மக்களின் வாழ்கை முறைகளிலேயே நாம் இதனை காணமுடியும். வழிபாடுகள், விழாக்கள், தொழில்முறைகள், நாட்டாரியற் கலைகள் போன்ற பல பண்பாட்டம்சங்கள் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது.
ஒரு முறை நீங்கள் கல்முனையிலிருந்து திருகோணமலை வரையான பாதை வரையும், மற்றும் புளியந்தீவிலிருந்து வீச்சு கல்முனையூடாக தெற்கு நோக்கி சென்றாலோ அல்லது செங்கலடியிலிருந்து பதுளை வீதியினூடாகப் பயணம் செய்தாலோ மட்டக்களப்பு மண்ணின் இயற்கை எழில்களை கண்டுமகிழலாம். இப்பிரதேசங்களில் மக்களின் பிரதான சீவனோபாயமான வயல்வெளிகளையும், அவற்றுக்கு சக்தி தரும் நீர்நிலைகளையும் கண்டுகொள்ளலாம். இந்நீர்நிலைகளில் தாமரை, அல்லி, ஆம்பல் போன்ற மலர்களையும் காணமுடியும்.
மட்டக்களப்பு பிரதேசமானது படுவான்கரை, எழுவான்கரை என இரண்டு பிரதேசங்களாக வகைப்பாடு செய்து இம்மக்களால் பார்க்கப்படுகின்றது. படுவான்கரைப்பிரதேசம் பல விருத்திகளைக் காணாத நிலையிலும் அதற்கே தனித்தான சிறப்புக்களையும் மட்டக்களப்பின் அழகினையும் இங்கே காணலாம்.
கிராமப்புறங்களிலே ஆகமம் சாராத கோயில்களையும் இச்சூழலிலே ஆல், அரசு, வேம்பு போன்ற பெரிய தருக்களையும் நாம் காணலாம். இக்கோயில்களிலே மக்கள் தெய்வத்துடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டு வழிபாடுகள் ஆற்றுவதனையும் காணலாம்.
மேலும் கடற்கரைப்பிரதேசத்தில் பிரயாணம் செய்யும் போது அதற்கான இயற்கை எழில்களையும் கண்டு மகிழலாம். பாசிக்குடா, கல்லடி போன்ற சுற்றுலா பிரயாணிகளை கவர்ந்த பொருளாதார முக்கியத்துவமுள்ள கடற்கரைப் பிரதேசங்களும், மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் கடற்கரை பிரதேசங்களும் காணப்படுகின்றன. அனேகமாக மட்டக்களப்பின் அனைத்து கடற்கரைப்பிரதேசங்களும் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை ஆகிய நானில செல்வாக்கினையும் கானலாம். சில புற்றரையான பிரதேசங்களில் பெருஞ்செல்வங்கள் எனக்கருதப்படும் மந்தைகள் மேயும் காட்சிகளும் தனியழகு மிக்கவை. இங்கு காணப்படும் காடுகளில் கருங்காலி, முதிரை, பாலை, தேக்கு போன்ற மரங்களும் காணப்படுகின்றன. அதுமட்டுமன்றி இக்காடுகளிலும் மலைப்பாங்கான இடங்களிலும் தேனீக்கள் தேன் சேகரிப்பதனையும் அவதானிக்கலாம்.
சில பகுதிகளில் பற்றைக்காடுகளையும் அவதானிக்கலாம், கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் கண்டல் காடுகளையும் அவதானிக்கலாம். இவை மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடையதாக காணப்படுவதோடு பொருளாதார நடவடிக்கைளுக்காகவும் உதவிபுரிகின்றன.
இங்கு மட்டக்களப்பு வாவியினை அண்மித்ததாகக் காணப்படும் ஊரனி, பிள்ளையாரடிப் பிரதேசத்தில் காணப்படும் கண்டல் காடுகளை நோக்கி வருடாந்தம் இடம்பெயரும் பறவைகளும் இங்கு வந்து சேருகின்றன. ஆகவே இதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு உரியதாகும். இதே போல் வாகரை, மாங்கேனி, போன்ற பிரதேசங்களிலும் கண்டல் காடுகளை நாம் அவதானிக்கலாம்.
மட்டக்களப்பு மண்ணில் பல கோயில்களை காணலாம். இவையும் கூட மக்களின் வாழ்வியலோடு தொர்புபட்டுள்ளதை அவதானிக்கலாம். மக்கள் விழாக்கள் கொண்டாடுதல், நேர்த்தி செலுத்துதல், திருவிழாக்காலங்களில் கிராமியக்கலைகளை வளர்த்தல் போன்ற செயற்பாடுகளை நாம் அவதானிக்கலாம்.
இப்பிரதேச மக்கள் வியர்வை சிந்தி தமது உழைப்பை மிகுதியெனக்கருதி உடலை வருத்தி பல தொழில்களில் ஈடுபடுவதனை அவதானிக்கலாம். விவசாயம், மீன்பிடி, மந்தை மேய்தல், விறகு சேகரித்தல், சிறு கைத்தொழில்களான சட்டி பானை வனைதல் போன்ற பல தொழில்களை கூறமுடியும்.
மேற்கூறப்பட்டவாறு மட்டக்களப்பு மண்ணானது புவியியல், பண்பாடு, காலநிலை, தொழில் ரீதியிலான பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளமையை அவதானிக்க முடியும்.
(ஆக்கம்:- அ.பிரசாந்தன், கிழக்குப் பல்கலைக்கழகம்)

