07 July 2013

ஏறாவூர் பத்திரகாளி அம்பாளின் ஆலய வரலாறு

SHARE
ஏரூராள் மாகாளி இணைதாள் துணை! அன்பே சிவம் அதுவே நலம்!
நாகர்குலப் பெருமன்னன் நல்லியக் கோடன் என்பான்
நல்லாட்சி கண்டதொரு ஏறுமாநாடு என்பார்
தாகமுடன் கொற்றவையை தலம் இயற்றி வழிபட்டான் அந்தநாளில்
தனித்துவமாய் தமிழர்குலம் தன்னாட்சி கண்ட பூமி !
வேகமுடன் பல்லினங்கள் வந்திருந்து அமர்ந்த பூமி !
                              வெறுப்பின்றி யாவரையும் சமமாக மதிக்கும் பூமி !
   ஏகமா காளி அன்னை காட்டுமாஞ்சோலை கண்டு உறைந்த பூமி !
இனியதொரு ஏறாவூர் என்றதொரு பெயரினால் இலங்கும் பூமி !

இத்தகு பழம்பெருமை நிறைந்த ஏறாவூர் மாநகர் பல்லாண்டுகால வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மட்டக்களப்பின் வடபால் 14 கிலோமீற்றர் தூரத்தில் பல்லின மக்களும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒருமனத்துடன் வாழும் புண்ணிய பூமி கிழக்குத் திசையில் வரலாற்றுத் தொடர்புடைய இஸ்லாமியப் பெருமக்களும் வடபால், தென்பால், குணபால் (மேற்கு) செந்தமிழர்களும் வாழும் புனிதபூமி.
தென்கிழக்கிலே அற்புதமகான் மீராலெப்பை என்னும் புனிதர் (அவுலியா) அடங்கிய அடக்கஸ்தலம், தென்மேற்கிலே மதுமலர்க்கா வீரபத்திரர் அருளாட்சி செய்யும் இடம், மேற்கிலே அன்னை கருமாரியின் திருக்காட்சி, கருமாரியம்மன் ஆலய மருங்கிலே பல்லாண்டுகளுக்கு முன் தாமரைக் குளத்தடியில் நாவலடி விநாயகர் வீற்றிருந்த பூமி, வடக்கிலே பழமை மிகுந்த ஐயன்கேணி. இத்தகு தெய்வீகப் பதிகள் சூழத் தோன்றாப் புகழோடு திருமகளும், கலைமகளும், மலைமகளும், களிநடம் புரியும் இந்தப் புண்ணிய பூமியிலே நான்காம் குறிச்சி எனும் பிரதான நகரத்தின் மத்தியில் வம்மியடிப் பிள்ளையார் என்ற வரசித்தி விநாயகர் ஆலயம். இவ்வாலயம் பண்டைய மன்னர் காலத்தில் சிவாலயமாக இருந்திருக்கின்றது. அவ்வாலயத்தில் இருந்து வடக்கே சற்று நடந்தால் அனைத்து பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட காட்டு மாஞ்சோலையில் மாங்காட்டுக்காளியாக வீற்றிருக்கும் அன்னை பத்திரகாளியம்மனின் ஆலயம். இவ்வாலயத்தைச் சூழ இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட மிகப்பெரிய காட்டு மாமரங்கள் 1978ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி வீசிய சூறாவளியில் வீழ்ந்து அழிந்தன. தற்போது அதற்குச் சாட்சியாக ஒரேயொரு காட்டுமரம் தலவிருட்சமாக அன்னையின் ஆலயப் பின்புறமாகக் காட்சி தருகின்றது. இலவ்வாலயத்தின் தலவிருட்சங்கள் இரண்டாகும். ஒன்று உதிரவாங்கி என்ற அற்புதமான மரம். மற்றது காட்டுமாமரம். உதிரவாங்கி மரம் தறிக்கப்பட்டது. தற்போது காட்டுமாமரமே தலவிருட்சமாக உள்ளது.
கடந்தகால போர்ச் சூழலும் யுத்தக் கொடுமையும் வன்செயல் எனும் புன்செயலும் ஏறாவூர் மாநகரையே அழித்து அலங்கோலப்படுத்தியது. அன்னையின் ஆலயத்திற்கு உரித்துடைய கோடிக்கணக்கான பொருட்கள் அழிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. ஏறாவூர் 4ம் குறிச்சியில் வாழ்ந்த மிகப்பெரும் செல்வந்தர்கள் உடுத்த உடையோடு நிற்கதியாயினர். ஏறாவூர் நகரை விட்டு மட்டக்களப்பு, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை போன்ற இடங்களில் உயிரையாவது காப்பாற்றுவோம் என்று சென்று வாழத் தலைப்பட்டனர்.
- 1 -
போன இடங்களிலெல்லாம் ஓரளவு வளங்கண்டு தாய் மண்ணாகிய ஏறாவூருக்கு படிப்படியாக வரத்தலைப்பட்டு ஒருசில குடும்பங்கள் குடியேறி 1995ம் ஆண்டுக்கு பின்னதாக ஏறாவூர் ஓர் புதிய மாற்றத்தைச் சந்தித்தது. அதன் பின் ஏறாவூர் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் அனைத்து மக்களின் பேராதரவுடன் ஊராரின் உதவி நலத்துடனும் கலையழகுமிக்க ஆலயமாக 2009ம் ஆண்டு சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகத்தைக் கண்டது.
பிள்ளையாருக்குரிய கடமைகளை நிறைவேற்றிய பின் அன்னை காளியின் கடமையை நிறைவேற்ற அன்னையிட்ட கட்டளை போல் கடந்த 36 ஆண்டுகள் எதுவித திருத்தப்பணிகளும் இன்றி பொலிவு இழந்திருந்த அவ் ஆலயத்தை புதுப்பித்து பேரருள் தெய்வ ஆலயமாக மாற்ற முயன்றதின் பயனாய் கடந்த 2011 மேமாதம் முதலாக வேலைத்திட்டங்ள் தொடங்கப்பட்டு முதற்கட்டமாகப் பழைய ஆலயத்தை சிதைக்காமல் இரண்டு தளமாக இருந்த கருவறை விமானத்தை மூன்று தளமாக உயர்த்தி கருவறையைச் சுற்றி நீராவிப்பந்தி, கருவறை விமானத்தில் அம்மனின் அற்புதம் நிறைந்த சிற்பங்களோடு அழகிய வேலைப்பாடு அமைந்த கருவறைப்பணி நிறைவுறும் கட்டத்தில் இருக்கின்றது.
SHARE

Author: verified_user