மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவினுள் அடங்குகின்ற பெரும்பாலான விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு இடம்பெயர்கின்ற அவலநிலைமை கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்றது. ஈரளக்குளம், ஆவட்டியாவெளி, லாவாணை போன்ற பகுதிகளில் மேட்டுநிலப் பயிர்ச்செய்கை, மரக்கறித் தோட்டம், நெற்பயிர்ச்செய்iகை ஆகியவற்றை மேற்கொண்டு அப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களாக யானைகளின் தொல்லைகளினால் தங்களது உயிரையும், உடமையையும் பாதுகாக்கும் பொருட்டு மிகவும் சிக்கலான நிலையில் போராடி வந்தார்கள். ஆனால் யானைகளின் அட்டகாசம் மிகவும் மோசமாகவுள்ளதனால் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட்டு தமது ஊரிலுள்ள வீடுகளுக்கும், வேறு இடங்களுக்கும் உயிரைமட்டுமாவது பாதுகாக்கவேண்டும் என்ற நோக்குடன் இடம்பெயர்ந்து வருகின்றார்கள்.
குறைந்த எண்ணிக்கையிலானோரே இந்தப் பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் இவர்களது பிரச்சினைகள் வெளிஉலகிற்கு தெரியவராமல் அங்கேயே புதைந்துவிடுகின்றன. யானைத் தாக்குதல்களால் உயரிழப்புக்கள் ஏற்பட்டாலும் கூட அவை பற்றி பெரிதாக எந்தவொரு அதிகாரியும் அலட்டிக்கொள்வதில்லை என்பது அங்கிருந்து இடம்பெயரும் மக்களது செயற்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன.
அண்மையில் அதாவது கடந்த 29.05.2013 அன்று ஈரளக்குளம் - லாவாணை பகுதியில் வைத்து விவசாயி ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார். இவர் ஆவட்டியாவெளி எனுமிடத்தில் மீள்குடியேற்றப்பட்டு வசித்து வந்த ஒரு விவசாயி ஆவார். இக்குறிப்பிட்ட ஆவட்டியாவெளி பகுதியில் சுமார் 10 குடும்பங்களே வசித்து வந்தன. தங்களுடைய விளைநிலங்களையும், கால்நடைகளையும் பராமரித்துக்கொண்டு மேட்டு நிலப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் வறிய குடும்பங்களே இந்தப்பகுதியில் வாழ்ந்துவந்தார்கள்.
தற்போது அக்குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தொல்லையின் காரணமாக தமது குடியிருப்புக்களை விட்டு அணைவரும் ஒன்று சேர்ந்து தமது நெல்வயல்பகுதியினுள் இரவு நேரத்தில் ஒன்று சேர்ந்து பயத்துடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். ஒரு புறம் யானையின் தொல்லையினால் தமது வயல்களை பாதுகாக்கும் நோக்கில் வயல்பகுதிகளில் வாழ்ந்தபோதிலும் தமது குடியிருப்புக்களில் வாழ முடியாத நிலையில் உள்ளனர். இதனால் இந்த நிலையில் பலவிவசாயிகள் வயல் போனாலும் பரவாயில்லை. உயிரைப் பாதுகாத்தால் கூலிவேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து வெளியேறி சித்தாண்டி மற்றும் குடாவட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தமது உறவினர்களின் வீடுகளில் தங்கி வருகின்றார்கள்.
ஆவட்டியாவெளியில் வசித்து வரும் பிரதேசவாசி ஒருவர் ''போன வருசமும் இங்க இருந்ததான் தம்பி ஆனால் இப்ப யானைத் தொல்லை அதிகமாயிடுச்சி. அதைவிட யானைக்கு முந்தியெண்டா வெடிக்கொழுத்தி எறிஞ்சி, டோச் அடிச்சி சத்தம் போட்டமண்டா அதுகள் ஓடிரும். ஆனா இப்ப வெடி எறிஞ்சாலே அப்படியே நிற்கிது . சிலவேளை நம்மட பக்கமே வருது. போனவருசப் பயிர்தான் வெள்ளத்தில் நாசமாயப் போச்சு. இதையும் விட்டா நாங்க உயிர்வாழ்றதே கஸ்டம். அதுதான் தொடாச்சியா இருந்த வாடியையும் பிரிச்சித்து வந்து எங்கட வயலுக்குப் பக்கத்தில நாட்டித்து இவடத்த கிடக்கிறம். இந்த அதிகாரிகள் எங்களுக்கு இதற்கு ஒரு தீர்வு பெற்றுத்தரவேணும்'' என்று மிகவும் தளதளத்த குரலில் கூறினார்.
ஆவட்டியாவெளி பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்த்தால் அங்குள்ளவர்களின் நிலைமை புரியும். ஆவட்டியாவெளியில் பாதிக்கப்பட்ட சிலரை பொலிசார் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமது சேதவிபரம் தொடாபாக கரடியனாறு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். அரசியல்வாதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பிரதேசத்து மக்களின் அவலநிலை தொடர்பாக கவனத்திலெடுக்கவேண்டும் என்பதே குறிப்பிட்ட பிரதேச மக்களின் அவாவாகும்.
ஆவட்டியாவெளியில் யானை தாக்கிய உறைவிடமும், தோட்டமும்
ஆவட்டியாவெளியில் தமது வயல்நிலங்களுக்கு அருகாமையில் இடம்பெயர்ந்து வசித்து வரும் விவசாயியும், விளைநிலமும்
கடந்த 2012 ஆம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் தமது தோட்ட நிலம் மற்றும் கால்நடைபண்ணையில் ஆவட்டியாவெளி விவசாயிகள்
.jpg)
