வானம் வறண்டால் சிறப் பொரு பூசனை செல்லாது" என்றார் வள்ளு வர். கிழக்கில் வானம் வறண்டுவிட்டது. ஜுன், ஜுலை ஆகிய இரண்டு மாதங்களிலும் ஒரு மில்லி மீற்றர் மழை கூட மட்டக்களப்பில் பதிவாகவில்லை. ஆனால் நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்து பாதகமான வினைவுகளை ஏற்படுத்தியது. மலையகத்தில் பெய்த மழையினால் மட்டக்களப்பில் உயர்ந்த மலையக மரக்கறி விலைவாசி இன்னமும் இறங்கவில்லை.
வான் மழை இன்றி வாடுகின்றன பயிர்கள். நீர் ஏற்று நிலைகள் மற்றும் நீர் நிலைகள் யாவும் வற்றிவிட்டன. கால் நடைகள் மட்டுமன்றி, மனிதர்களும் குடிநீருக்கு அலைகின்றனர். குடி நீருக்கே தட்டுப்பாடு நிலவும் போது ஏனைய அன்றாட நீர் பாவனை எப்படி இருக்கும். மனிதனை வாட்டி வதைக்கும் கச்சான் காற்று மற்றும் உஷ்ணம் வேறு.
மட்டக்களப்பு, கதிரவெளி தொடக்கம் துறைநீலாவணை வரை வடக்கு தெற்காக நீண்டு கிடக்கும் ஒரு மாவட்டமாகும். கிழக்கே வங்காள விரிகுடா. மேற்கே அம்பாறை மாவட்டம். அம்பாறை மாவட்ட எல்லைக்கும் வங்காளவிரிகுடாவுக்கும் இடையே மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் பனிச்சங்கேணி வாவிகள். இவ் விரிகுடாவுக்கும் மட்டு. வாவிக்கும் இடையிலான கிராமங்கள் எழுவான்கரை எனப்படும் நகரப் பகுதியாகும். வாவிக்கு மேற்கே உள்ள கிராமங்கள் படுவான்கரை என அழைக்கப்படுகின்றன. நகரப்பகுதியுடன் ஒப்பிடுகையில் படுவான்கரை பின்தங்கிய பகுதியாகும்.
மட்டு. மாவட்டம் 2464.4 கிலோ மீற்றர் நிலப்பரப்பையும் 168.3 உட்புற சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பையும் கொண்டுள்ளது. மாதுறு ஓயாவைத் தவிர வறட்சி வலயத்தில் உற்பத்தியாகும் 14 ஆறுகள் உள்ளன. 21 பெரிய குளங்களும், 293 சிறிய குளங்களும், மேலும் 250 கிராமப் பகுதி குளங்களும் இருப்பதாக மாவட்ட செயலகத்தினால் 1993 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வெளியீடு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தை இரு கூறுகளாகப் பிரிக்கும் வாவியும் வாழைச்சேனை, பனிச்சங்கேணி ஆறுகளும் உட்பட சுமார் 17 ஆறுகளும் 21 பாரிய குளங்களும் மேலும் நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் கிராமியக் குளங்களும் இருந்தும் இங்கு வறட்சி வருடா வருடம் தாண்டவமாடுகின்றது.
எழுவான்கரை பகுதியில் மட்டு. மாநகர சபை பிரிவு, துறைநீலாவணை ஆகிய இடங்களில் குடிநீருக்கு வருடம் முழுவதும் தட்டுப்பாடு நிலவியது.
உன்னிச்சை குடிநீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட பின் மாநகரசபை பிரிவில் மட்டுமன்றி காத்தான்குடி குடிநீர்ப் பிரச்சினையும் தீர்ந்தது. உன்னிச்சைநீர் ஆரையம்பதி, ஏறாவூர் நகர், செங்கலடி ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.
துறைநீலாவணைக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகின்றதாயினும் அது போதுமானதாக இல்லை என்று குறை கூறப்படுகின்றது. நீருக்குப் பதிலாக காற்று வெளியேறி மானியை இயக்கி கட்டணத்தை அதிகரிக்கின்றதாம். கொண்டவட்டவான் குளத்திலிருந்து மற்றொரு குடிநீர் திட் டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது பூர்த்தியானதும் இக்கிராமத்துக்கு தாராளமான நீர் விநியோகிககப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கலடி பிரிவில் பதுளை வீதியிலுள்ள கொடுவாமடு, இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான், பங்குடாவெளி, உறுகாமம், கரடியனாறு, கித்துல் மரப்பாலம், புல்லுமலை, மங்களகம, ஈரலைக்குளம் ஆகிய கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அப்பிரிவு பிரதேச செயலாளர் உ.உதய ஸ்ரீதர் தெரிவித்தார்.
போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள 43 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் 30 பிரிவுகளுக்கு தற்பொழுது பௌஸர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும். எஞ்சிய 13 கிராமங்களுக்கும் இன்னும் சில தினங்களில் விநியோகிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம் தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மேற்படி 43 பிரிவுகளிலும் 12,455 குடும்பங்களை சேர்ந்த 43,579 பேர் வசிக்கின்றனர். இவற்றில் காக்காச்சிவட்டை, வெள்ளாவெளி விவேகானந்தபுரம், காந்திபுரம், தும்பங்கேணி, சுரவணையடியூற்று, களுமுந்தான்வெளி, திக்கோடை, பாலையடிவட்டை, பலாச்சோலை, றாணமடு, நெல்லிக்காடு, பொறுகாமம், மலையார்கட்டு, கண்ணாபுரம், விவேகானந்தபுரம் ஆகிய கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்படும் முக்கிய கிராமங்களாகும்.
வாகரை பிரதேசம் மிகவும் பின்தங்கியதும் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசமுமாகும். இங்குள்ள கட்டுமுறிவு கிராமத்தில் பாரிய நீர்ப்பாசனக் குளம் அமைந்துள்ளது. ஆனால் இக்கிராம மக்களுக்கு குடிப்பதற்கு நீர் இல்லை. வாகரை பிரதேசத்தில் கட்டுமுறிவு ஆலங்குளம், தோணி தாண்டமடு, புனாணை, ஓமடியாமடு வட்டவான் காயாங்கேணி, மாங்கேணி, கிரிமிச்சை முதலிய கிராமங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாகரை பிரிவில் சுமார் 6,263 குடும்பங்களைச் சேர்ந்த 20,999 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு கிராமிய குடிநீர் விநியோகத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒரு திட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகரை பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி தெரிவித்தார். ஒரு திட்டத்திற்கு சுமார் மூன்றரைக் கோடி ரூபாவை செலவிட வேண்டியிருப்பதாகவும் எனவே சகல கிராமங்களிலும் சாத்தியப்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 7,430 குடும்பங்களை சேர்ந்த 26,199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தெரிவித்தார். பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் அருள் நேசபுரம், கற்சேனை, தாந்தாமலை, குழுவினாமடு, கடுக்காமுனை, பண்டாரியாவெளி முதலிய பல கிராமங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இந்த மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் அநேகமான பிரிவுகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
14 பிரிவுகளிலும் 74,479 குடும்பங்களைச் சேர்ந்த 2இலட்சத்து 52ஆயிரத்து 679 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாவட்டத்தின் சனத்தொகை 1,62,742 குடும்பங்களில் 5,86,400 பேராகும். பாதிக்கப்பட்ட விபரம் இதனை எழுதும் போது பெறப்பட்டதாகும். சிலவேளை இது மேலும் அதிகரிக்கலாம்.
மழையின்றி வரட்சி ஏற்பட்டால் பாசன வசதி குறையும். குடிநீருக்கும் மற்றும் பாவனைக்கும் தட்டுப்பாடு நிலவும். வாழ்வாதாரம், குறிப்பாக விவசாயம் பாதிக்கப்படும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையே மேற்படி 2,52,679 பேராகும். மழைக்கு எவரும் எதனையும் செய்ய முடியாது. நிதி ஏற்பாடுகள் இருப்பின் வறட்சி நிவாரணம் வழங்கப்படலாம். இல்லையேல் வழங்கப்படாமலும் விடலாம். இந்த நிவாரணம் கூட சோளப் பொரியாகவே அமையும். மேலே குறிப்பிட்டுள்ள அநேக கிராமங்களில் இந்த வருடத்தில் மட்டும் வறட்சி ஏற்படவில்லை. வருடாவருடம் கோடை காலத்தில் அதாவது, மே மாதம் தொடக்கம் செப்டெம்பர், ஒக்டோபர் மாதம் வரை வறட்சி நிலவுகிறது. இந்த வருடம் கூடுதலான வறட்சி அதிகமான கிராமங்களில் ஏற்பட்டுள்ளது. இதற்கு கடந்த வருடத்தில் மாரி காலத்தில் போதுமான அளவு வழமையாகப் பெய்யும் மழை பெய்யாமையும் இவ்வருடத்தில் குறைவான மழைப் பெய்தமையும் காரணமாகும்.
2013 ஆம் ஆண்டில் 1972.9 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ள போதிலும் செப்டெம்பரில் 82.3 மில்லி மீற்றரும் அக்டோபரில் 24 மில்லி மீற்றரும் நவம்பரில் 198.8 மில்லி மீற்றரும் டிசம் பரில் 271.1 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. சுமார் 70 ஆண்டுகளின் பின்னர் மாரி மழை இவ்விதம் குறைவாக பெய்தது 2013 ஆம் ஆண்டாகும். இதேவேளை இந்த வருடத்தில் 544.6 மில்லி மீற்றர் மழையே மே வரை பதிவாகியுள்ளது. ஜுன், ஜுலை மாதங்களில் ஒரு மில்லிமீற்றர் மழை கூடப் பதிவாகவில்லை. ஜுன் கண்ணகி அம்மன் சடங்கின் போது குளிர்த்தி பாடியபின் மழை பெய்வது வழக்கமாகும். இவ்வருடம் அந்த மழையும் பெய்யவில்லை.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நீர்வளம் போதிய அளவு இருந்தும் அதனை சேமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்கள் தவறிவிட்டனர். ஆக உன்னிச்சை குளம் மட்டுமே உயர்த்தப்பட்டு குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. நவகிரி குளத்திலிருந்து குடிநீர் திட்டத்தை ஆரம்பித்தால் போரைதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு குடிநீரை தாராளமாக விநியோகிக்க முடியும் என்று கூறப்படுகின்றது. உறுகாமம், கித்துள் ஆகிய இரு குளங்களையும் இணைக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு 200 கோடி ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடலுக்கு வீணே செல்லும் முந்தாளை ஆற்று நீரை தேக்குவதன் மூலம் செங்கலடி தொடக்கம் வாகரைவரை கூட குடிநீரை விநியோகிப்பதுடன் மேலும் கூடுதலான ஏக்கர் நிலத்தில் நெற்செய்கைக்கு பாசன வசதியை செய்ய முடியும் எனவும் கல்குடா தொகுதியில் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த முடியுமெனவும் அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்த இணைப்புத் திட்டத்திற்கு நிதியுதவி செய்ய உலக வங்கி முன்வந்தது. எனினும், அவ்வாறு இரு குளங்களையும் இணைத்தால் மேற்கில் அம்பாறை மாவட்டத்திலுள்ள டம்பிட்டிய குளம் நிரம்பி அப்பகுதி நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படுமென அப்பகுதி வாசிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனையடுத்து உலக வங்கி பின்வாங்கிவிட்டது. பின்வாங்க வேண்டாமென மட்டு.மாவட்ட மக்கள் பதிலுக்கு ஆர்ப்பாட்டம் செய்ய முன்வரவில்லை. உறுகாமம் - கித்துள் இணைப்பின் மூலம் வருடாந்தம் இரண்டாயிரம் மில்லியன் கனமீற்றர் நீரை குடிநீருக்கு வழங்கலாம் எனவும் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அபிவிருத்தி பற்றி பேசும் போது நீடித்து நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்று பேசப்படுகின்றது. ஆனால் வரட்சியை பற்றி பேசும் போது பௌஸர் மூலமாக யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற நிலையில் தற்காலிக தீர்வே வழங்கப்படுகின்றது. பௌஸர் நீர் சகல மக்களையும் சென்றடையுமா? என்பது ஒரு கேள்வி. அவ்வாறு வழங்குவதற்கான ஆளணி மற்றும் வாகன வசதி பிரதேச சபையிடம் இருக்கின்றனவா? என்பது மற்றைய கேள்வி. அவ்வாறு இருப்பதாக எடுத்துக் கொண்டாலும் நீண்ட தூரம் சென்று குடிநீரை எடுத்துவர வேண்டியுள்ளது.
போரதீவு பற்று பிரதேச சபை களுவாஞ்சிக்குடி பிரதேச சபையிலிருந்து நீரை பெற்றுச் செல்கின்றது. வாகரை பிரிவிலுள்ள கிராமங்கள் நீண்ட இடைவெளியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக உள்ளன. இதன் காரணமாக ஒரு நாளைக்கு ஒரு கிராமத்துக்கு நீரை விநியோகிக்க முடியுமென அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நீடித்து நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்று கூட்டங்களில் கோஷமிடப்படுகின்றது. அப்படியானால் குடிநீர் பிரச்சினைக்கு மட்டுமன்றி மட்டக்களப்பில் தற்போது உயிரோட்டமான பிரச்சினையாகவுள்ள பிரச்சினைக்குமான தீர்வு யானை பசிக்கு சோளப் பொரியாக அமையக் கூடாது.
இன்னொரு பிரதேச செயலாளர் பிரிவில் 11க்கு மேற்பட்ட கிராமங்களில் வருடாவருடம் வறட்சி ஏற்படுகின்றது. இதற்கு எவ்வாறான தீர்வு காணப்பட வேண்டும் என்று அப்பகுதி அதிகாரியொருவரிடம் கேட்டபோது, வறட்சி இல்லாத பகுதிகளில் குடியமர்த்த வேண்டும் என்று பதிலளித்தார். இதிலும் அர்த்தமில்லாமலில்லை. அரைவாசிக் கும் மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் அநேகமான கிராமங்களில் வறட்சி ஏற்படுகிறது.
இவ்வாறு 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1,62,742 குடும்பங்களை சேர்ந்த 5,86,400 பேர் மட்டு. மாவட்டத்தில் வசிக்கின்றனர். இவர்களில் 71,479 குடும்பங்களை சேர்ந்த 2,52,679 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிய வருகின்றது. குடியமர்த்துவது சாத்தியமில்லை என்பது யாவருக்கும் புரியும். அதேவேளை குடிநீர் விநியோகமும் வறட்சி நிவாரணமும் தற்காலிக தீர்வாகவே அமையும். வறட்சி நிவாரணம் இழப்பு முழுவதையும் ஈடு செய்யவும் மாட்டாது. 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடாக ஒரு ஏக்கருக்கு இரண்டு புசல் வரை நெல் மட்டுமே வழங்கப்பட்டது. இது சோளப் பொரி ஆகாதா?
2013 இறுதியில் ஏற்பட்ட வறட்சி காரணமாக 2014 சிறுபோகம் மட்டுப்படுத்தப்பட்டது. நீர் தட்டுப்பாடு காரணமாக நவகிரி திட்டத்தில் மட்டும் 6000 ஏக்கர் சிறுபோகம் செய்கை பண்ணப்படவில்லை. என்று நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார். மாகாண நீர்பாசன திட்டத்தின் கீழ் நீர்ப்பற்றாக்குறை காரணமாக சுமார் இரண்டாயிரம் ஏக்கரில் சிறுபோகம் செய்கைப் பண்ணப்படவில்லை என மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார். மழையை வேண்டுவதுடன் மழைக்காலத்தில் கடலுக்கு செல்லும் நீரை தேக்குவதற்கும் உறுகாமம் - கித்துள் இணைப்பு போன்ற நடவடிக்கை மூலம் தீர்வு காணலாம்.
ஆனால், நாம் இங்கு வலியுறுத்த விரும்புவது குடிநீர்ப் பிரச்சினையாகும். இதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணிபுரிய வேண்டும். குறுமண்வெளி ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் கட்டடம் மட்டுமே எஞ்சியுள்ளது. வெல்லாவெளியில் 98 இலட்சம் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட மற்றொரு திட்டம் திறந்து வைக்கப்படாமலே கைவிடப்பட்டது. கண்ணகிபுரம் கிழக்கில் உத்தேசிக்கப்பட்ட கிராமிய நீர் விநியோகத் திட்டத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
உன்னிச்சை நீர் சுத்திகரிப்பு நிலையம் வவுணதீவு கிராமத்தில் உள்ளது. உன்னிச்சை குளம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கிறது. ஆனால் வரட்சியான வவுண தீவும் அதனை அண்டிய பல கிராமங்களும் உன்னிச்சை நீர் விநியோகத்திட்டத்தில் ஆரம்பத்தில் உள்ளடக்கப்படவில்லை. திட்டத்தை வகுத்தவர்களின் கவனயீனமே இதற்கு காரணம் என்று பின்னர் கூறப்பட்டது. மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுத்ததன் காரணமாக இப்போது 2 ஆம் தடவையாக சில பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலைக்கு இப்போது சிறிய கொள்கலன்களில் படகு மூலம் நீர் கொண்டு செல்லப்படுகின்றது. உன்னிச்சை நீர் விநியோகத் திட்டம் தீட்டப்பட்ட போது மாநகர சபைக்கு உட்பட்ட மாந்தீவு உள்ளடக்கப்படவில்லை. இதனை அறிந்திராமல் மாந்தீவு பிரதேச சபை பிரிவான வவுண தீவுக்கு உட்பட்டது என உணர்ந்து கொண்டதால் உள்ளடக்கப்படவில்லை என்று பின்னர் கூறப்பட்டது. இந்தத் தவறு காரணமாக மாந்தீவுக்கான குடிநீர் விநியோகம் இன்று பல் ஈற்றுக் குச்சும் ஆப்பும் தேவைப்படும் கதையாகிவிட்டது.
நாட்டில் நிலவிய அசாதாரண நிலை காரணம் என்று கூறப்படலாம். அனைத்து விடயங்களுக்கும் அது ஏற்புடையதாக மாட்டாது. ஓர் அனர்த்தம் முடிவடையும் தறுவாயில் மற்றைய அனர்த்தம் வந்து விட்டால் முன்னைய அனர்த்தம் பழங்கதையாகிவிடும். பருவ மழையுடன் வெள்ளம் ஏற்பட்டால் பின்பு வெள்ளம் காரணமாக வரும். எனவே இவற்றை விடுத்து இனிமேலாவது காத்திரமான திட்டங்களைத் தீட்டவும் அவற்றுக்கு தேவையான பணத்தை பெறவும் பெற்றுக் கொடுக்கவும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் முன்வர வேண்டும். மாறாக பேச்சாலும் எழுத்தாலும் மக்களை திருப்திப்படுத்துவதுடன் மட்டும் நிற்கக் கூடாது.(vk)
(பாக்கியராஜன்)(tks sajeev)



