06 July 2014

முறக்கொட்டான் சேனை மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

SHARE
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் உள்ள நீர்நிலையில் மூழ்கி மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 முறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தில் உள்ள தனியார் வகுப்புக்கு செல்லும் ஆண்டு 9 மற்றும் 10 பயிலும் 14 மாணவர்கள் மாணவி ஒருவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர். குறித்த தனியார் வகுப்பு நிலையத்தின் ஆசிரியர் தலைமையில் பெற்றோரும் இணைந்ததாக இந்த சுற்றுலாவினை மேற்கொண்டுள்ளனர்.  
நீர்நிலைக்கு அருகில் குறித்த மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது மட்டியெடுக்கவென இரு மாணவர்கள் நீரில் இறங்கியுள்ளபோது அந்த மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த ஏனைய நான்கு மாணவர்கள் அவர்களை காப்பாற்ற நீரில் பாய்ந்துள்ளனர்.இந்த நிலையில் அவர்களும் மூழ்குவதை கவனித்த ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விரைவாக செயற்பட்டு காப்பாற்றச்சென்ற நான்கு பேரையும் காப்பாற்றியபோதிலும் முன்னதாக மூழ்கிய இருவரும் சடலமாகவே மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 
இதன்போது தரம் 10இல் கல்வி பயிலும் செல்லத்தம்பி செல்வராணி மற்றும் தரம் 9பயிலும் சாந்தன் பிரவின்(14வயது)ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். இதன்போது நீரிழ் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE

Author: verified_user